Saturday, November 21, 2015

நாம் சிரித்தால் தீபாவளி


               'மாப்ள, நாளிக்கி வலங்கைமான் போயே ஆவனும்  பாத்துக்க பக்கத்து பெஞ்சுலேந்து காதுக்குள் கத்தினான் ஆகாஷ்.தீபாவளினாலே எனக்கு ஞாபகம், வர்ரது ஏதுமறியா பருவத்தில் கொண்டாடிய சிறுவண்டு கொண்டாட்டங்கள் தான். ஆயுத பூஜை முடிந்து தீபாவளிக்கு ஊர் கலகட்டுதோ இல்லையோ நாங்க எங்களுக்குள்ள கலகட்ட ஆரம்பிச்சிருவோம். ஆகாஷும் நானும் ஒன்றாக ஒன்பதாவது படித்த காலம்.அவன் தான் எங்க க்ளாசோட இளைய தளபதி ரசிகர் மன்ற தலைவர். எல்லார்ட்டயும் எப்போதும் குதுகலமாக சுற்றி திரியும் அவன் தீபாவளிக்கு வெடி வாங்க என்னை கூப்பிடாத சரித்திரம் இல்லை.”வலங்கைமான்ல தான் மாப்ள டேரக்டா ரெடி பன்றாங்க. அங்கையே போயி சல்லிக்காசுல வாங்கி இரைச்சிடுவோம்ங்டா என்றான் ஒரு மாசத்துக்கு முன்பே.நானும் வரன்டா ன்னு சாகுல் வந்தான். சாகுல் மதுரக்கார பய.திருவாரூர்ல பிரியாணினா எல்லார்க்கும் தெரியுர ஆசிஃப் பாய் பையன்.டேய் ஒனக்கு இப்ப எதுக்கடா வெடி என்றதற்கு நீங்கலாம் வெடிக்கிறீல நானும் வெடிக்கிறம்ல என்றான்.நிஷா புயல் அடித்த காலமது.க்ளாச கட் அடித்துவிட்டு தலையில் செளத்தாளைக் கட்டிக் கொண்டு நாங்கள் மூவரும் வலங்கை பஸ்ல ஏற்னோம்.அங்க போனாத்தான் தெரியுது இன்னும் வெடியே ரெடி ஆகலைன்னு.’என்ன தம்பிவோலா இப்பயே கெளம்பிட்டீலா, போயி ரெண்டு வாரங்கழிய வாங்க என்றார் கடைக்காரர்.முறைத்து பார்த்த சாகுலை இளித்து பார்த்து விட்டு பஸ் ஏறினோம். அப்புறம் ஒரு நாள் எல்லாருமா சேந்து பட்ஜெட் போட்டு ஆகாஷ் வாங்கிட்டு வந்தான்.புஸ்த்தகத்துக்கு பதிலா பேக்குல பட்டாசு தூக்ன காலமது.அது கூட மேட்டர் இல்ல.அப்பா வாங்கிட்டு வர பட்டாசோட யாருக்கும் தெரியாம அத கலப்படம் பன்னனும்.அது வரைக்கும் அத பீரோக்கு கீழ,லாஃப்டுக்குள்ளன்னு மறச்சிவக்கிறதெல்லாம் பாக்க ஹரி பட ச்சேசிங் சீன் மாதிரி இருக்கும்.
ஒரு நாள் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது.ராமச்சந்திரனோட அப்பா டிவி ஆப்பரேட்டிங் மெக்கானிக்.அப்பா இருங்க அவர கூட்டிட்டு வரேன்னுப் போனேன்.வந்துப் பாத்துட்டு என்னங்க டிவி வச்சிருக்கீங்க? இவ்ளோ கேவளமா.இப்டி வச்சிருந்தீங்கனா பிக்ச்சர் ட்யூபே வெடிச்சிரும் போங்க என கிளுக் கிளுக்கென்று சிரிக்க அப்பா தலையை சொறிந்தார்.என்னடா இப்படி கேட்டுப்புட்டாரேன்னு அப்பாவுக்கு மனசுல நசநசப்பு.என்னடா அப்பா இப்டி ஃப்பீல் பன்றாரேன்னு எனக்கு கொரகொரப்பு.ஏதாவது பன்னனுமேன்னு நினைக்கும் போது தான் தீபாவளி டைம் வந்த்து.எப்பவும் மதியானம் சாப்ட வூட்டுக்கு எங்க தெரு வழியாத்தான் போவார்.பளிச் என்று மண்டைக்குள் ட்யூப் லைட் எறிந்த்து.கணேசன்,பரமு,மகேஷ்,நிவேதா,நீலா என செட் அடித்தோம்.கட்டச்சுவர் மாநாடு நடத்தி ப்ளானப் போட்டோம்.ராமச்சந்திரன் அப்பா சித்தி விநாயகர் கோயிலை அப்போதைய ஹீரோ ஹோன்டா சிடி 100ல் கடந்தார்.மகேஷ் ஓடிப் போய் நடுரோட்டில் அழகாக பச்சக் என்று குந்திக் கொண்டு இருந்த பச்சைப்பசேல் சாணியில் ஒலக்க வெடியை குத்த வைத்தான்.ரெடியாக இருந்த நான் அவர் உழவர் பயிற்சி மன்றத்தைத் தாண்டியதும் ஓடிப் போய் பத்த வைத்தேன்.திரி கொஞ்சம் நீளம் தான்.தூரத்ல வேகமாக வந்ததுனால எதயுமே அவர் கவனிக்கல.செம டைமிங்.வெடிச்ச அடுத்த செக்கன்ட்ல சப்புன்னு சட்ட,ஃபேன்ட்லாம் அப்பிக்கிடுச்சி.ரோட்டையே அவர் அவ்ளோ கோவமா வெறிக்க வெறிக்கப் பார்க்க, செங்கல் அடுக்குகளின் இடுக்கில் ஒளிந்துக் கொண்டு சிரிக்க சிரிக்கப் பார்த்துவிட்டு காட்டுக்குள் ஓடியது வாழ்வின் அரிய தருணங்கள்.
சாரதி என் நெருங்கிய நண்பன்.அப்பா தவறி விட்டார்.அம்மா கோலமாவு கடை வைத்திருந்தார்.எப்போதும் பக்கதிலையே உட்கார்ந்திருக்கும் அவனைப்போல் கண்ணே கலைமானேப் பாட்டை இதுவரை யாரும் அவ்வளவு அழகாகப் பாடிக் கேட்டதில்லை.தீபாவளிக் காலத்தில் என்னடா புது ட்ரெஸ் எடுத்துட்டியான்னு கேட்டேன்.சில நிமிடங்கள் என் கண்களையே உற்றுப் பார்த்துவிட்டு கீழே தரையைப் பார்த்து எதையோ யோசிப்பது போல் தலையைத் தடுமாறி தடுமாறி ஆட்டி ஏதோ அங்கலாய்தான்.’ஏன்டா என்னாச்சி என்றதற்கு,’இல்லடா இப்ப சொக்கா எடுக்குற அளவுக்கு காசில்ல, அடுத்த மொற எடுத்துக்கிறலாம்னு அம்மா சொல்ட்டாங்கடான்னு அவன் என் கண்களைப் பார்த்து கலங்கிய போது தான் எனக்கும் வறுமைக்குமான இன்ட்ரோ கிடைத்த்து.அக்கண நேரம் இன்றும் கண்களுக்குள் நிழல்படமாகவே நிற்கின்றது.
பால்ய வயதிருக்கும்.ஒரு நாள் மொட்டை மாடிக்கி ஊசி வெடி கொண்டு சென்றேன்.அங்கு தான் நான் ஊசி வெடியில் பி.ஹெச்.டி பன்னியது.வெடியை காற்றில் பறக்க விட்டு வெடிப்பது,நுனியை நசுக்கி,வளைத்து சங்கு சக்கரம் விடுவது, கையால் நசுக்கி குத்த வைத்து புஸ்வானம் விடுவது எனப் பல டெக்னிக்குகள்.கொஞ்ச நாளில் அதுவும் சலித்துப் போயாகிவிட்டது.கொஞ்சம் த்ரில்லாக ஏதாவது செய்லாம்னு யோசிச்சப்போது ஒரு ஐடியா தோன்றியது.பேசாம மாடியில நின்னுக்கிட்டு வர்ரவங்க போரவங்களுக்கு கொஞ்ச தூரம் தள்ளி வெடியக் கொளுத்திப் போட்டா என்னன்னு பட்சி சொன்னுச்சு.’சூப்பர்ரா விக்கின்னு வேற உசுப்பேத்துனுச்சு.சரி ட்ரைப் பன்னலாமேன்னு ஃப்ர்ஸ்ட்டு ஒரு நடுத்தர வயதுக்காரர்க்கு தூரம் தள்ளிக் கொளுத்திப் போட்டேன்.எகிறி குதித்து பூனைப் போல் கத்தியவர் ரோட்டையே முழிச்சுப் பாத்துக் கொண்டிருந்தார்.அப்றம் ஒரு ஆன்ட்டி.தூக்கி அடிச்சி ஜெர்க்கடித்த ஆன்ட்டி அலறி அடித்து ஓடியது.மூன்றாவதாக வந்தவர் நியூட்டனின் மூன்றாம் விதியை என்னிடம் காட்டி விட்டார்.டி.வி.எஸ் 50யில் வந்தவர் சத்தத்தைக் கேட்டு அசால்ட்டாக இறங்கி வந்து எவன்டா அவன் அடிங் ***********************,****************************,****,*************,********** என ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சில நாட்களுக்கு பிறகு விசாரித்தபோது தான் அவையெல்லாம் மோசமான கெட்டவார்த்தைகளென்று அவை எல்லாத்தயும் அழகாக இன்ட்ரோ கொடுத்தான் அண்ணாமலை.அப்புறம் நான் டேய் என்னா இது கூட தெரியாதாடா?ன்னு நிறையப் பேருக்கு இன்ட்ரோ கொடுத்தது வேறக் கத.
குழந்தைக் கால தீபாவளிக் கூத்துகளையெல்லாம் மறக்க முடியுமா என்ன?லீவுக்கு மொதல் நாள் சாயங்காலம் ஸ்க்கூல்ல ஃப்ரன்ட்ஸ்க்லாம் வாழ்த்துக்கள் சொல்லிட்டு,போர்டுல கிருக்கிட்டு வீட்டுக்கு வந்தால் அம்மா முறுக்கு சுடும்.திட்டு வாங்கிக்கிட்டு அரவேக்காடுல இருக்ற முறுக்க வாங்கி திங்கிற சுவையேத் தனி.தீபாவளி நாள் ஏதோ சொர்க நாள் போல் இருந்தது. ’தீபாவளி முடிஞ்சிருச்சா இனிமே அடுத்த வருஷம் தானா?’ ன்னு 10 மணிக்கி கூடத்துல பாய்ல படுத்துக்கிட்டு நானும் என் அக்காவும் அதே டயலாக்க மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் மூஞ்சிக்கு மூஞ்சப் பாத்துக்கிட்டு தூங்கின நேரம் ஏதுமறியாப் பருவத்தின் உச்சக்கட்ட உணர்வு நேரம்.ஆனந்த் வெடிக் கடை லிஸ்ட்ட வச்சிக்கிட்டு அப்பா இந்த வெடில்லாம் வேனும்னு சேட்ட பன்னதுலாம் அப்பாவுக்கு எரிச்சலூட்டிய நேரம்.அடுத்த வீட்ல அதிகமா தாள் கெடந்துதுனா அதுக்காக அவன் மூஞ்சில முழிக்க அசிங்கப் பட்ட நேரம்.
பால்யதிலும்,சிறுவண்டிலும் குதுகலமாகச் சென்ற அத்தீபாவளியை கொஞ்சம் பொறுப்பு வந்ததும் அதே சந்தோஷத்தோட,குஜால்ட்டியாக கொண்டாடுவதில்லை,கொண்டாட முடிவதில்லை.
காலேஜுக்கு லீவு போட்டுட்டு தீபாவளிக்கு திருவாரூருக்கு கோயம்பேட்டில் பஸ் ஏறின நேரம்.எப்போதும் இனிசியலோடு பேர் சொல்லுகின்ற,சொல்லிக் கூப்பிடுகின்ற,மனதில் அப்படியேப் பதிந்து விட்ட சி.சங்கர கோகுலிடமிருந்து ஃபோன்.’என்னடா மச்சின்னு கேட்டா டேய் பஸ்ஸ மிஸ் பன்னிட்டேன்டா.என்னடா பன்றதுன்னு பரபரபித்தான்.அப்போது பெருங்களத்தூரைத் தாண்டியிருந்தேன்.’டேய் அதுலாம் ஒன்னும் ஆகாது கவலப் படாத என்றவுடன் சரிடான்னு கட் பன்னான்.ராத்திரி ஃபுல்லா பஸ் ஸ்ட்டாண்டுலயே தூங்கிட்டு கருக்கல்ல எண்ணத் தேய்க்க வேண்டிய நேரத்துல பரட்டத்தலையோட கோட்டுவாயோட தூத்துக்குடிக்கி பஸ் ஏற்னது கொடுமையிலும் கொடுமை.

என்னதான் பெருசுல 3000த்துக்கு வெடிச்சாலும் சிறுசுல 500க்கி கெடச்ச டமால் டுமீல் சந்தோசம் கிடைப்பதில்லை.ரோட்டோரதுல அம்மா வாங்கிக் கொடுத்த 100ரூபாய் சொக்காவின் மகிழ்ச்சி பேசிக்ஸ் 029ல் கிடைக்கவில்லை.கீழப்படுகை குளத்தில் நீச்சலடித்த எனக்கு ஸ்விம்மிங் ஃபூலில் ஸ்விம்மிங் பன்னும் போது காமடியாக இருக்கிறது.வாழ்வின் பயனங்கள்,பொறுப்புகள் பொருட்டு ஊர்,உறவு,கோயில் திருவிழா,குளம்,விழா, நிகழ்ச்சிகள்,விளையாட்டுகள்,தெருக்கூத்துகள்,கிணறுகள் என பலவற்றை இழந்துவிட்டு நினைத்து நினைத்தே வாடுகின்றோம்.ஆஃபிஸ்,காலேஜ் லீவு நாட்களில் வீட்டுக்கு போகும் போது அம்மா முன்னாடி வந்து நின்னுக்கிட்டு டேய் எண்ணெய்லாம் தேச்சிக் குளிக்காதடா,சலி புடுச்சிக்கும்.இந்தா சாம்பு ன்னு நீட்டும் போது,”அந்த கால நினைவினிலேஎன்று தான் தோன்றுகின்றது. ம்ம்…….என்னதான் பன்றது.கிடைக்கும் விழா நாட்களில் சந்தோஷமாக கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவித்துக் கொண்டு விழாக்களக் கொண்டாடுவோம். நாம் சிரித்தால் தான் தீபாவளி……!வாங்க பாஸ் போய் வெடி வெடிப்போம்.